ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பது முறை இணைந்து 685 ரன்கள் அடித்திருக்கிறார்கள். இதில் சராசரி 76.1 ஆகும்.
இந்த நிலையில் ஷுப்மன் கில் அளித்துள்ள பேட்டியில், “ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். ஏனென்றால் பந்துவீச்சாளர்களின் கவனம் முழுவதும் ரோகித் சர்மா மீது தான் இருக்கும். ரோகித் சர்மா எப்போதுமே மற்ற வீரர்கள் அவர்களுடைய திறமையை முழுசாக வெளிப்படுத்தி விளையாடுவதற்கு உறுதுணையாக நிற்பார்.
நாம் எப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு ரோகித் சர்மா தடையாக நிற்க மாட்டார். வீரர்களுக்கு அவர் முழு சுதந்திரம் அளிப்பதன் மூலம் நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ. அதை செய்ய முடியும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது ரோகித் சர்மா என்னிடம் இதை தான் சொன்னார். நீ சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதி உடைய வீரர் என்று நமக்கு உறுதுணையாக இருப்பார்.
ஏன் என்றால் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது இளம் வீரரான நமக்கு இவ்வளவு பெரிய போட்டிக்கு நாம் தகுதியான ஆட்களா இல்லையா என்று நமக்கு சந்தேகம் ஏற்படும். அப்போது ரோஹித் அட்வைஸ் நமக்கு ஊக்கத்தை கொடுக்கும். ரோகித் சர்மாவின் ஆட்டமும் என்னுடைய ஆட்டமும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.
ரோஹித் பவர் பிளேவில் தூக்கி அடிக்க பார்ப்பார். ஆனால் நான் பில்டர்களுக்கு இடையே உள்ள கேப்பை பார்த்து பவுண்டரி அடிக்க முயற்சி செய்வேன். ஆனால் அவர் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்வார். எங்களுடைய இருவரின் ஜோடியும் இதுவரை நன்றாக செயல்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.