அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!

Updated: Fri, Sep 30 2022 12:35 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அணியை பலப்படுத்தும் இறுதி கட்ட வேலையில் இறங்கியுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரே கடைசி வாய்ப்பு என்பதினால் இப்பொழுதே அணியின் பெஸ்ட் லெவனை களம் இறக்கி ரோகித் சர்மா அணியை இறுதிப்படுத்தி வருகிறார்.

இவ்வேளையில் இந்திய அணியில் தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் அசத்தலாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் கடைசி போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அதன் மூலம் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அவர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து மண்ணிலேயே சதம் அடித்த சூரியகுமார் யாதவ் அதன்பிறகு ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலிய தொடர், தென் ஆப்பிரிக்க தொடர் என கடந்த ஆறு மாதங்களாக வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார்.

அதோடு ஒரு ஆண்டில் அதிக சர்வதேச டி20 ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் ஷிகார் தவானை தாண்டி இந்த ஆண்டு படைத்துள்ளார். அதோடு ஒரு ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலிலும் உலக அளவில் அவர் ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இப்படி டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது புகழின் உச்சியைப் பிடித்து வரும் சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “டாப் கிளாஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள், டர்னிங் பிட்ச்கள் அல்லது சீமிங் பிட்ச்கள், கடினமான பேட்டிங் சூழ்நிலை என எதுவுமே சூரியகுமார் யாதவை தொந்தரவு செய்யவில்லை. அவர் மிகச்சிறந்த மேட்ச் வின்னர். அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம்.

நான்காம் இடத்தில் இறங்கி இப்படி ஒரு ஆட்டத்தை ஆடுவது நம்ப முடியாத ஒன்று. இன்னும் சில ஆண்டுகளுக்கு நம்பர் 4ஆஆம் இடத்தை அவரிடம் இருந்து யாராலும் பறிக்கவே முடியாது” என பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை