முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Mon, Oct 30 2023 14:06 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 66 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.

முன்னதாக போட்டியின் எந்த நேரத்திலும் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய  பும்ரா கடந்த 2022 ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 2 – 3 முறை மீண்டும் காயமடைந்து வெளியேறினார். 

அப்படி அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை விட பெரும்பாலான போட்டிகளில் ஓய்வெடுத்த அவர் முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறியதால் இவர் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று கிண்டல்கள் இருந்தன. 

மேலும் இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு இனிமேல் இவரால் கம்பேக் கொடுக்க முடியாது என்ற கருத்துக்களும் காணப்பட்டன. ஆனால் மனம் தளராமல் குணமடைந்த பும்ரா கம்பேக் கொடுத்ததிலிருந்து இதுவரை 13 போட்டிகளில் 26 விக்கெட்களை எடுத்து மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் அந்த விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் பற்றி பேசிய பும்ரா, “என்னுடைய மனைவியும் விளையாட்டு சம்பந்தமான ஊடகத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் என்னால் கம்பேக் கொடுக்கவே முடியாது என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டல்களையும் நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அது முக்கியமல்ல. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏனெனில் கம்பேக் கொடுத்த பின் நான் இந்த விளையாட்டை எந்தளவுக்கு விரும்பி விளையாடுகிறேன் என்பதை உணர்ந்துள்ளேன். காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது மனதளவில் நல்ல இடைவெளியும் இருந்தது. எனவே ஆம் தற்போது அனைத்தையும் நேர்மறையாக பார்க்கிறேன். முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை