எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவிசுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 108 ரன்களை விளாசினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக டோனி டி ஸோர்ஸி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில், 114 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 108 ரன்களை விளாசினார் சஞ்சு சாம்சன். அதுமட்டுமல்லாமல் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்கு பின் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த விருதை பெற்று கொண்ட பின் பேசிய சஞ்சு சாம்சன், “இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன். எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் ஆடுகளத்தையும், பவுலர்களின் மனநிலையையும் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் கிடைக்கும். அதேபோல் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை எடுத்து கொள்ள முடியும். திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் நிச்சயம் பெருமை கொள்வார்கள்.
கடினமான நேரத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். இந்திய அணியின் தரம் என்னவென்பதை இதற்கு முன் ஆடியவர்கள் ஒரு பெஞ்ச்மார்க்காக வைத்து சென்றுள்ளார்கள். அவர்களின் இடத்தில் ஜூனியர் வீரர்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதேபோல் பவுலர்களுக்கு இது எளிய தொடர் அல்ல. ஏனென்றால் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடுவது சாதாரணம் கிடையாது. ஆனாலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.