SA vs IRE, 1st T20I: டக்கரின் போராட்டம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டிக் காக், வெண்டர் டுசென் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 56 ரன்களில் மார்க்ரம் ஆட்டமிழக்க, 74 ரன்களைச் சேர்த்திருந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அயர்லாந்து தரப்பில் டெலானி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 18 ரன்னிலும், ஆண்ட்ரூ பால்பிர்னி 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் ஹேரி டெக்டர், கரெத் டெலானி, காம்பெர் என மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதற்கிடையில் லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அவருக்கு துணையாக டக்ரேலும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 78 ரன்களில் டக்கரும், 43 ரன்களில் டக்ரேலும் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேஷவ் மஹாராஹ், வெய்ன் பார்னெல், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.