NZ vs IND:ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Nov 20 2022 21:15 IST
Here's list of records Suryakumar Yadav broke on his way to 2nd T20I century (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது  போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ 3 விக்கெட்களும், ஃபர்குசன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த வருடம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானத்தில் இருந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சூர்யகுமார் திகழ்ந்து வருகிறார்.

தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சூர்யகுமார், நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதங்கள் அடித்து இருந்தார். தற்போது அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். முன்னதாக இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் 117 ரன்கள் அடித்து இருந்தார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் கேஎல் ராகுலுடன் இணைந்து சூர்யகுமார் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் நான்கு சாதனைகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி நியூசிலாந்தில் டி20யில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை