விஜய் ஹசாரே கோப்பை: ஆல்ரவுண்டராக கலக்கிய ரிஷி தவான்; இறுதியில் ஹிமாச்சல பிரதேசம்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹிமாசல பிரதேசம் - சர்வீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சர்வீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹீமாச்சல் அணி கேப்டன் ரிஷி தவான், பிரசாந்த் சோப்ரா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரிஷி தவான் 84 ரன்களையும், பிரசாந்த் சோப்ரா 78 ரன்களையும் சேர்த்தனர். சர்வீஸ் அணி தரப்பில் ராஜ் பகதூர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சர்வீஸ் அணியில் லகான் சிங், மோஹித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த கேப்டன் ராஜத் பலிவால் 55 ரன்களைச் சேர்த்து ஆறுதலளித்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 46.1 ஓவரிலேயே சர்வீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹீமாச்சல் அணி தரப்பில் கேப்டன் ரிஷி தவான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஹீமாச்சல பிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.