பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரிக்கேன்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் அணிக்கு கலெப் ஜூவெல் - மிட்செல் ஓவன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய மிட்செல் ஓவன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் கலெப் ஜூவெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டர்மோட் மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.
இதில் பென் மெக்டர்மோட் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, டிம் டேவிட் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் மற்றும் ஜாஃபர் சோஹன் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜோஷ் பிலீப், ஜேக் எட்வர்ட்ஸ், கேப்டன் ஹென்றிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் சிக்ஸர்ஸ் அணி 5 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கர்டிஸ் பேட்டர்சன் - ஜோர்டன் சில்க் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கர்டிஸ் பேர்ட்டர்ஸன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோர்டன் சில்க் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் 57 ரன்களில் ஜோர்டன் சில்க் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த லாச்லன் ஷா 33 ரன்களைச் சேர்த்தாலும் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹோபர்ட் தரப்பில் ரைலீ மெரிடித், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு சீசன் பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.