ரோஹித்திற்கு மாற்றாக களமிறங்கும் பிரியாங் பாஞ்சல்!
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்,, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்குகிறது.
டெஸ்ட் தொடருக்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள் பயிற்சியில் ஈடுபட்டனர்
இந்த நிலையில், துணைக்கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரியாங் பாஞ்சால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பிரியாங் பாஞ்சால் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க ஏ தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தினார்.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பாஞ்சால் அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். 2008ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமார் 13 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர்,7011 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 சதமும், 25 அரைசதமும் அடங்கும்.
இதனால் 2016-17 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காக களமிறங்கிய பாஞ்சால் 10 போட்டிகளில் 1310 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும். 31 வயதான பிரியங் பாஞ்சால், கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பெற்றார். தற்போது 100 போட்டிகளில் விளையாடிய பிறகு தான் இந்திய அணியில் இடமே கிடைத்துள்ளது. அதுவும் முன்னணி வீரருக்கு காயம் ஏற்பட்டதால் கிடைத்தது.
தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் பிரியாங் பாஞ்சாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் மாயங் அகர்வால் அணியில் உள்ளதால் அவரே கே.எல்.ராகுலுடன் களமிறங்கவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்திய அணிக்கு தேர்வானது குறித்து மகிழ்ச்சி அளிப்பதாக பிரியாங் பாஞ்சல் கூறியுள்ளார்.