விராட் கோலியை வீழ்த்துவதற்கு இதுதான் ஒரே வழி - ஏபிடி வில்லியர்ஸ் ஆலோசனை!

Updated: Sat, Dec 23 2023 13:19 IST
விராட் கோலியை வீழ்த்துவதற்கு இதுதான் ஒரே வழி - ஏபிடி வில்லியர்ஸ் ஆலோசனை! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக தொடங்குகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரை சமன் செய்து, ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா இத்தொடரையும் வென்று மிகப்பெரிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் சவாலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரையாவது வென்றுள்ள இந்தியா 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது கிடையாது. அதிகபட்சமாக 2010இல் எம்எஸ் தோனி தலைமையில் தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக 2021/22இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

எனவே அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக போராட தயாராகியுள்ள இந்திய அணியில் இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சாதாரண வீரராக விளையாட உள்ள விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்த அவர் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான தரத்தை கொண்ட விராட் கோலியை சற்று வித்தியாசமாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே தொடர்ச்சியாக பந்து வீசி அவுட்டாக்குவதே ஒரே வழி என்று தென் அப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். அதையும் அவர் சிறப்பாக எதிர்கொள்வார் என்பதால் விராட் கோலி எட்ஜ் கொடுக்கும் வரை காத்திருக்குமாறு தென் ஆப்பிரிக்கா பவுலர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “4ஆவது ஸ்டம்ப் சேனலில் பந்து வீசி வெயிட்டிங் கேம் விளையாடுவது தான் விராட் கோலி மாதிரியான பேட்ஸ்மேனை வெளியேற்றுவதற்கான ஒரே வழி. சிறிது தூரத்தில் பந்து வீசி அவுட்டாக்குவதற்கான வாய்ப்புக்காக காத்திருங்கள். ஏனெனில் நேராக பேட்டிங் செய்யக்கூடிய அவரைப் போன்ற வீரரை நீங்கள் அட்டாக் செய்ய முடியாது. 

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் போல எல்பிடபுள்யூ முறையில் அவரை அவுட்டாக்கலாம் என்று காத்திருப்பது வேடிக்கையானதாகும். ஏனெனில் அவர் உங்களை மிட் விக்கெட் திசையில் அடிப்பார். எனவே விராட் கோலிக்கு எதிராக நீங்கள் அந்த அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி விட்டு உள்ளே அல்லது வெளியே எட்ஜ் வாங்குவதற்காக காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை