எனக்கு நானே தான் ரோல் மாடல் - உம்ரான் மாலிக்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளம் பவுலரான உம்ரான் மாலிக், கடந்த 2021 ஐபிஎல் சீசனில் நெட் பவுலராக அணிக்குள் நுழைந்தவர். தொடர்ந்து அணியில் காயம்பட்ட வீரருக்கு மாற்றாக அதே சீசனில் அறிமுக வீரராகவும் களம் இறங்கினார். அந்த சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் அவர். இருந்தாலும் அதிவேகமாக பந்துவீசி தன் பக்கமாக எல்லோரது பார்வையையும் அவர் திருப்பியிருந்தார்.
அதன் பலனாக 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஹைதராபாத் அணி அவரை தக்கவைத்தது. மேலும் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வலைப் பயிற்சி பவுலராகவும் இயங்கினார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வருகிறார்.
மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசும் இவரது திறனை கண்டு 'இந்திய அணியில் அவர் நிச்சயம் விளையாடுவார்' என புகழ்ந்து வருகின்றனர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உம்ரான் மாலிக், "வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது. இந்த ஆண்டு சரியான இடத்தில் பந்து வீச முயற்சி செய்து வருகிறேன். எப்போதுமே நான் வேகமாக தான் பந்து வீசுவேன். எனக்கு நானே தான் ரோல் மாடல்.
எங்களுக்கு இர்பான் பதான் பயிற்சி கொடுக்க வந்த பிறகுதான் நான் சரியாக லைனில் பந்து வீச தொடங்கினேன். அதற்கு முன்னர் அங்கும், இங்கும் பந்தை எகிற விட்டுக் கொண்டிருந்தேன். ஜம்மு காஷ்மீருக்கும், நம் நாட்டுக்கும் பெருமை தேடி தர விரும்புகிறேன். நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கிரிக்கெட் வீரர்கள் என்னைக் குறித்து ட்வீட் செய்வதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இப்போதைக்கு பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் தான் உலகின் சிறந்த பவுலர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.