நான் என்னை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன் - ஆகாஷ் மத்வால்!

Updated: Thu, May 25 2023 12:43 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரிச்சை நடத்தினர். டாசை வென்று தைரியமாக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்கள் எடுத்தார்.

இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு இரண்டு விக்கட்டுகள் வேகமாக விழுந்தாலும், ஸ்டாய்னிஸ் அதிரடியான துவக்கத்தை பவர் பிளேவில் தந்தார். ஆனால் அதற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு லக்னோ 101 ரன்னில் சுருண்டு தோற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் மிகச் சிறப்பாக பந்து வீசி 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்று பிறகு பேசிய அவர், “2018 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் அணியில் இடம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியிலும் அதற்கடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியிலும் நெட் பவுலராக வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனக்கு மேலும் தொடர்ந்து விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்க நான் சிறப்பாகச் செயல்படுகிறேன்.

என்னுடைய பெரிய பலம் யார்க்கர். என்னுடைய இந்த பலம் ரோஹித் சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் என்னை சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். தேவையான இடங்களில் பவுல் செய்ய விடுகிறார். அவர் எனக்கு நம்பிக்கையைத் தருகிறார். என் பலத்தை ஆதரிக்கிறார். ஜஸ்ட்பிரித் பும்ரா அவரது லெவலில் இருக்கிறார். நான் என்னுடைய சொந்தத் திறமையில் இருக்கிறேன். நான் என்னை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை