பாகிஸ்தான் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி - ஜாகா அஸ்ரஃப்!
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு 7 வருடங்கள் கழித்து வந்துள்ளனர். எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருதரப்பு தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய மண்ணில் கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் வந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உட்பட தற்போதைய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தங்களுடைய கேரியரிலேயே முதல் முறையாக இப்போது தான் இந்திய மண்ணிற்கு வந்துள்ளார்கள். அந்த சூழ்நிலையில் பல்வேறு அம்சங்களிலும் தங்களுக்கு எதிரான கோட்பாடுகளை வைத்திருக்கும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எம்மாதிரியான வரவேற்பு கொடுக்கப்படும் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள்.
ஆனால் விருந்தினர்களை உபசரிக்க தவறாத இந்தியர்கள் ஹைதராபாத் நகருக்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களுக்கு நிகரான உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதே போல தோளில் துண்டு போட்டு தலையில் பன்னீர் தெளித்து பிசிசிஐ கொடுத்த வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த பாபர் அஸ்ஸாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சமூகவலைகளில் நன்றி தெரிவித்தனர்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத பாகிஸ்தான் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப் “எதிரி நாட்டுக்கு சென்றுள்ள நம்முடைய வீரர்களுக்கு நாம் தான் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று நேற்று முன்தினம் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக பேசினார். அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் நாங்கள் பகையை மறந்து இவ்வளோ பெரிய வரவேற்பு கொடுத்தோம் ஆனால் நீங்கள் வாரியத்தின் தலைவராக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? என்று சமூக வலைதளங்களில் அவரது பேயர் ட்ரெண்ட் செய்து திட்டி தீர்த்தார்கள்.
இந்நிலையில் “பரம எதிரி” என்று பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையை தான் செய்தியாளர்களிடம் சொன்னேனே தவிர இந்தியாவை எதிரியாக நினைத்து சொல்லவில்லை என்று ஜாகா அஸ்ரப் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் ஹைதராபாத் நகரில் கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றியும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பாகிஸ்தான் வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், எங்கள் மீதான அன்பு ஹைதராபாத் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பில் தெரிந்தது.
இந்த வகையான வரவேற்பு ஏற்பாடு செய்த இந்தியர்களுக்கு ஜாகா அஸ்ரப் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் களத்தில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் அவை பாரம்பரிய போட்டியாளர்களாக உருவாகின்றன. ஆனால் எதிரிகளாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அதே போல பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு எப்போதும் உலகளாவிய கவனத்தில் மையமாக இருந்து வருவதாக பாரிய தலைவர் நிர்வாக குழு வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.