‘நான் எனது திட்டப்படி செயல்பட்டேன்’ - போட்டியின் வெற்றி குறித்து பொல்லார்ட்!

Updated: Sun, May 02 2021 11:06 IST
Image Source: Google

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பொல்லார்டின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை துவம்சம் செய்து வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்டு 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

இந்நிலையில், சென்னை அணியை துவம்சம் செய்தது குறித்து பேசிய ஆட்டநாயகன் பொல்லார்டு, சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து தான் ரன் குவிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொல்லார்ட் பேசுகையில், “முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் களத்திற்கு வந்த பிறகு சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு 4 ஓவர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. நான் சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து அதிகமான ரன்கள் குவித்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். 

ஆனால் எனக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு ஓவர் மட்டுமே கிடைத்தது, அதை நான் சரியாக பயன்படுத்தி கொண்டேன். இது போன்ற போட்டிகளில் ஓரிரு சிக்ஸர்கள் போட்டியையே மாற்றிவிடும். அதிகமான பயிற்சிகள் எடுத்ததன் மூலம் என்னால் இன்று சிறப்பாக விளையாட முடிந்தது. நான் என்னை 360 டிகிரி வீரர் என கூற மாட்டேன், ஆனால் என்னால் முடிந்த வரையில் அனைத்து திசையிலும் ரன் குவிக்க பார்ப்பேன். 

கடைசி 6 பந்துகளையும் நானே எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதற்கு தாவல் குல்கர்னியும் ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். இது போன்ற பரபரப்பான போட்டியில் நிதானமாக நின்று திட்டங்களை சரியாக செய்வது தான் முக்கியம். டூபிளசிஸ் நான் கொடுத்த கேட்சை விட்டது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

இந்த ஆடுகளத்தில் அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது நம்பிக்கையை கொடுத்துள்ளது, இதே நம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை