இவ்வளவு பணத்தை யாராலும் செலவு செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை - முத்தையா முரளிதரன்!

Updated: Thu, Sep 14 2023 14:59 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை தொடர் வரலாற்றில் நடப்பு ஆசியக் கோப்பை தொடர்பு போல நிறைய சர்ச்சைகளை சந்தித்த தொடர் இருக்காது. பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு நடுவேதான் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு வெகு முன்பாகவே சர்ச்சைகள் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்து விட்டது. அது போட்டி தொடங்கியும் நிற்கின்ற நிலையில் இல்லை.

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் நாட்டிடம் இருந்தது. ஆனால் இந்திய அரசாங்கமும் இந்திய கிரிக்கெட் வாரியமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இது தொடர்பாக நீண்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் முதல் முறையாக ஆசிய கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் மீண்டும் சர்ச்சை இலங்கையில் கடுமையாகப் பெய்து வரும் மழையினால் திரும்ப எழுந்தது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இருநாட்டு ரசிகர்களும் கடும் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் உள்ளானார்கள். இதைச் சரி செய்ய இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் டே கொண்டு வந்தது. மற்ற அணிகளுக்கு இப்படி இல்லாததால் அதுவும் மிகப் பெரிய சர்ச்சையாக மாறியது.

இந்த நிலையில் டிக்கெட் விலை மிக அதிகமாக இருக்க கூட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. இதுகுறித்து பேசி உள்ள இலங்கை ஜாம்பவான் முரளிதரன், “இந்த ஆண்டு ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதால் டிக்கெட் விலை அவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். தற்பொழுது இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை முன்னிட்டு டிக்கெட் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அது நிலைமையை மாற்றவில்லை.

போட்டிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் இலங்கை மதிப்பில் 6 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. இதே மேல் ஸ்டாண்டில் இருந்து போட்டியை பார்ப்பதற்கான கட்டணம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் இலங்கை மதிப்பில் இருக்கிறது. இலங்கையில் இது ஒருவரின் மாத வருமானம். இலங்கையில் இவ்வளவு பணத்தை யாராலும் செலவு செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. செய்யவும் மாட்டார்கள்.

வானிலை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிராவில் முடிந்தது. மேலும் இது தொடர்பாக மைதானங்கள் மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தைகள், குழப்பங்கள் சென்று கொண்டிருந்தது. இப்படியான நிலைமைகள் இருக்கும்பொழுது, மக்கள் தைரியமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வர மாட்டார்கள். இந்த காரணங்களினால்தான் மைதானத்தில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை