என்னுடன் தோனி, ஜடேஜா,ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கிலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயராகி வருகின்றனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம் எஸ் தோனி விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எம் எஸ் தோனியே தாமாக முன்வந்து தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்து.
இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் இத்தொடரின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதுவரை 15 சீசன்களில் சிஎஸ்கே அணியை வழிநடத்தியுள்ள மகேந்திர சிங் தோனி 5 முறை தனது கேப்டன்ஸியின் கீழ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பு வகிப்பது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இது ஒரு சிறந்த தருணமாக பார்க்கிறேன். இருப்பினும் கேப்டன் பதவியில் பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாகச் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். என்னுடன் தோனி, ஜடேஜா,ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். அதனால் அவர்கள் என்னை வழிநடத்துவார்கள். இதனால் நான் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த சீசனை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட், இதுவரை 52 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதங்களுடன் 1,797 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.