மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக இருந்தவர் குல்தீப் யாதவ். ஆதிலும் அஸ்வின் - ஜடேஜா இணையை உடைத்து, இந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்தவர்.
ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு குல்தீப் யாதவ் மெல்லமெல்ல இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இந்திய அணிக்காக 3 விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய குல்தீப், இப்போது எந்தவிதமான போட்டியிலும் ஆடுவதில்லை.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த தொடரில் குல்தீப் யாதவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்நிலையில், இந்த தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள குல்தீப் யாதவ், “நான் நன்றாக ஆடினால், கண்டிப்பாக மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன். அந்தவகையில் இலங்கை சுற்றுப்பயணம் எனக்கு மிக மிக முக்கியமான ஒன்று. நான் சிறப்பாக செயல்பட இந்த தொடர் எனக்கு அருமையான வாய்ப்பு.
இலங்கை தொடருக்கு அடுத்து ஐபிஎல் இருக்கிறது. எனவே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், டி20 உலக கோப்பை பற்றி நான் பெரிதாக சிந்திக்கவோ கவலைப்படவோ இல்லை. அணியில் எனது பணி என்னவென்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்” என தெரிவித்துள்ளார்.