சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Mon, Apr 29 2024 12:25 IST
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. .

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடி 98 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகைய ஈரப்பதத்துடன் கூடிய ஆடுகளத்தில் விளையாடுவது என்பது எப்போதும் கடினமான ஒன்றாகும். மேலும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சிறப்பான விஷயம்.

கடந்த போட்டியில் கூட 20 ஓவர்கள் பேட்டிங் மற்றும் 20 ஓவர்கள் ஃபீல்டிங் இருந்தது. இன்றும் கிட்டத்தட்ட அதேதான். சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம். ஆனால் இறுதியில் என்னால் அதிரடியாக விளையாடமுடியவில்லை. இதனால் இன்னிங்ஸின் முடிவில் நாம் குறைவான ரன்களை எடுத்து விட்டோம் என்று வருத்தப்பட்டேன். நல்லவேளையாக இந்த ஸ்கோரானது எங்களுக்கு போதுமானதாக இருந்தது. 

இன்று நாங்கள் களத்தில் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். திட்டமிட்டபடி செயல்பட்டு, சூழ்நிலைகள் என்ன என்பதை அறிந்தோம். மேலும் இம்பேக்ட் வீரர் விதிமுறையின் காரணமாக எப்போதும் நீங்கள் 20 ரன்களை கூடுதலாகவே அடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் எது தங்களுடைய இலக்கு என்பதை நிர்ணயிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்றைய போட்டியில் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்துவீசினார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

அதேபோல் ரவீந்திர ஜடேஜாவையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் ஓய்வறையில் உள்ள சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதனை என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களுக்கே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதனால் அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை