ஐபிஎல் என் வாழ்க்கையை மாற்றியது - கிளென் மேக்ஸ்வெல்!

Updated: Wed, Feb 02 2022 20:44 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்கும் 590 வீரர்களை தங்கள் அணிக்கு தேர்வு செய்ய 10 அணிகளும் கோடிகளில் போட்டி போட உள்ளன. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் கணிசமான எண்ணிக்கையில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முஹமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த சீசனுடன் அந்த பதவியில் இருந்து விலகியதால் தங்கள் அணிக்கான புதிய கேப்டனை ஏலத்தின் வாயிலாக அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது.

கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் என பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். கடந்த 2020 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய அவர் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாமல் படுமோசமான ஃபார்மல் திண்டாடினார். 

இதனால் அவரை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் கழட்டி விட்ட போதிலும் அவரை 14.25 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு பெங்களூர் அணி நிர்வாகம் நம்பி வாங்கியது. அந்த நம்பிக்கையை காப்பாற்றிய அவரும் அந்த சீசனில் ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அந்த அணி பிளே ஆப் சுற்று வரை செல்ல முக்கிய பங்காற்றினார்.

கடந்த சீசனில் 513 ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் அதிக ரன்கள் குவித்த பெங்களூரு வீரராக விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற வீரர்களை முந்தி முதலிடம் பிடித்தார். அதன்பின் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அந்த ஃபார்ம்மை அப்படியே தொடர்ந்த அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டி20 உலககோப்பையை ஆஸ்திரேலியா கையில் ஏந்த முக்கிய பங்காற்றினார். இதனால் ஐபிஎல் 2022 சீசனில் ரூபாய் 11 கோடிகளுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக கிளன் மேக்ஸ்வெல் பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறுகையில்,“ஐபிஎல் எனது வாழ்க்கையை ஒரு மிகச்சிறப்பான வழியில் மாற்றியுள்ளது. அதில் நான் பார்த்து ரசித்த சில ஹீரோக்களை பார்த்ததுடன் அவர்களுடனும் அவர்களுக்கு எதிராகவும் விளையாடும் வாய்ப்பை அளித்தது. இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் என்னை ஒரு கிரிக்கெட்டராகவும் ஒரு நல்ல மனிதராகவும் மாற்றியுள்ளது.

இந்தியாவின் கலாச்சாரத்தை பற்றி நான் இளம் வீரராக இருந்த போது எனக்கு தெரியாது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் நான் பார்த்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது என்னை ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியது. அத்துடன் ஒரு நல்ல சர்வதேச கிரிக்கெட்டராகவும் வளர உதவியது. அதனால் எந்த வகையான சூழ்நிலைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொள்ள என்னால் முடிந்தது. எனது 11 வருட கிரிக்கெட் கேரியரில் இந்தியாவுக்கு இதுவரை 24 முறைகள் வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மட்டுமல்லாது இந்தியா தமக்கு மிகவும் பிடித்த ஒரு நாடு என கூறியுள்ள அவர் ஒரு இந்திய வம்சாவழி பெண்ணை திருமணம் செய்துள்ளார். அத்துடன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக் பேஷ் லீக் தொடரில் அபாரமாக பேட்டிங் செய்து 450 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை