தோனி எனது சகோதரரைப் போல - திசாரா பெரேரா!
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் எம் எஸ் தோனி இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான கேப்டனாக கருதப்படுகிறார். ஒரு சிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி பல கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி மோசமான தருணங்களில் நின்ற போது அவர்களுக்கு ஆதரவு கரங்களை நீட்டி ஆலோசனைகளை வழங்கி அவர்களின் வளர்ச்சி உதவவும் அவர் எப்போதும் தவறியதில்லை.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திரம் ட்வயன் பிராவோ தொடங்கி தென்ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி வரை பல வெளிநாட்டு வீரர்களின் வளர்ச்சியில் தோனி பங்காற்றியுள்ளதாக அவர்களே சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் தோனி தமக்கு சகோதரர் போன்றவர் என இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் கீழ் நான் விளையாடிய போது அவரை எனது சகோதரர் போல உணர்ந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தலைமையில் நான் விளையாடியது மறக்க முடியாத ஒன்றாகும். அந்த வருடம் நாங்கள் கோப்பையையும் வென்றோம். அது எனது முதல் ஐபிஎல் சீசனான இருந்தபோதிலும் அதுவே எனது சிறந்த சீசனாகும். மேலும் எனது கனவு டி20 உலக அணிக்கு அவர்தான் கேப்டன் ஆவார்” என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சில சீசன்களில் மட்டும் விளையாடிய போதிலும் தமக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி சென்னை என திசாரா பெரேரா கூறியுள்ளார். அத்துடன் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடும் போது அவர் தம்மிடம் ஒரு சகோதரர் போல நடந்துகொண்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றில் முதல் ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றதுடன் 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ள தோனியை தமது கனவு டி20 அணியின் கேப்டனாகவும் திசாரா பெரேரா தேர்வு செய்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அவர் அதன்பின் தொடர்ச்சியாக அந்த அணியில் விளையாட முடியாமல் சன்ரைசர்ஸ் போன்ற அணிகளில் விளையாடி வந்தார். அந்த வேளையில் கடந்த 2016ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் இலங்கையின் திசாரா பெரேராவை புனே அணிக்காக விளையாட ஏலத்தில் எம்எஸ் தோனி விரும்பி தேர்வு செய்திருந்தார்.
அந்த சீசனில் நடந்த ஒரு போட்டியில் புனே அணி மோசமான தொடக்கம் பெற்றபோது தோனியுடன் பேட்டிங் செய்யும் வாய்ப்பை திசாரா பெரேரா பெற்றார். கடந்த 2016 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி உடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இன்னும் நினைவில் உள்ளது. அந்தத் தருணத்தில்தான் நான் அவரை ஒரு சகோதரர் போல உணர்ந்தேன். அந்த சீசனில் ஒரு போட்டியில் புனே 35/5 என தடுமாறியபோது நான் பேட்டிங் செய்ய களமிறங்கினேன்.
அப்போது தோனி எதிர்ப்புறம் இருந்தார். அந்த சமயத்தில் என்னிடம் வந்த அவர், “ஹாய் டி பி, நீ ஜஸ்ட் பேட்டிங் செய்” கூறிவிட்டு சென்றார். அதனால் நான் எதிர்கொண்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் தடுப்பாட்டம் ஆடினேன். அப்போது மீண்டும் என்னருகே வந்த அவர், “ஹாய் டி பி, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என கேட்டார். அதற்கு நான் “நான் வெறும் பந்தை பார்த்து விளையாடினேன்” என கூறினேன். அதற்கு அந்த தருணத்தில் மோசமான ஸ்கோருடன் தவித்த போது அவர் கூறிய பதில் நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில் அவர் என்னிடம் “இல்லை, இல்லை. நீ பந்தை பல மைல் தொலைவிற்கு பறக்க விடுவதற்காகவே உன்னை நான் தேர்வு செய்தேன்” என கூறியதாக பெரேரா தெரிவித்துள்ளார். அந்த தருணம் பற்றி அவர் பேசிய அவர்,“அதன்பின் நான் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்கத் துவங்கினேன். இறுதியில் வெறும் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தேன் என நினைக்கிறேன். அந்தத் தருணம் போட்டி எங்கள் பக்கம் திருப்பியது. மேலும் எம்எஸ் தோனி கடைசிவரை பேட்டிங் செய்ததால் நாங்கள் 35/5 என்ற நிலையிலிருந்து 170+ ரன்களை எடுத்தோம் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்
மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போதும் எம்எஸ் தோனி கொடுத்த ஊக்கமான வார்த்தைகள் ஒரு நல்ல ரன்களை குவிக்க உதவியதாக பெரேரா பெருமிதத்துடன் கூறியுள்ளார். கடந்த 2016 ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்சில் விளையாடிய திசாரா பெரேரா 150 ரன்களையும் 9 விக்கெட்டுகளையும் எடுத்து தோனியின் கீழ் ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.