வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆஸ்திரேலியாவில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நடைபெற்று முடிந்துள்ள சூப்பர் 12 சுற்றின் முடிவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் களமிறங்கும் இந்தியா அணி, இறுதிப்ப்போட்டிக்கு செல்ல போராட உள்ளது.
முன்னதாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக களமிறங்கிய தன்னுடைய கடைசி சூப்பர் 12 போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் இரு மடங்கு அதிரடியாக செயல்பட்டு, கடைசி 5 ஓவரில் இந்தியாவை 69 ரன்கள் குவிக்க வைத்து மிகச் சிறந்த பினிஷராகவும் செயல்பட்டார். அதை விட நேற்றைய போட்டியில் ஒய்ட் போல வந்து பந்துகளை கூட பின்னங்காலில் நின்று அசால்டாக மடக்கி அடித்து அவர் பறக்க விட்ட சிக்சர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் ஏன் தம்மை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சூரியகுமார் நேற்று செயல்பட்டார். முன்னதாக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தியுள்ள அவர் இந்த வருடம் 1000 ரன்களை குவித்த முதல் வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார். அப்படி ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இதர வீரர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார். அவர் குவித்துள்ள ரன்களையும் அவர் விளையாடும் விதத்தையும் பார்ப்பதற்கு ரசனையை ஏற்படுத்துகிறது. அதே சமயம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக மட்டுமல்ல உலகின் தரமான டாப் பந்து வீச்சுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அவர் இப்படி பேட்டிங் செய்தால் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க எங்கே செல்வது? டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட் செய்ய எது சிறந்த வழி? அதாவது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை ஏதோ ஒரு வகையில் அவுட் செய்யலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்த மாதிரியான பார்மில் பெரும்பாலும் பின்னங்காலில் விளையாடுவதால் அவருக்கு எதிராக பந்து வீச எந்த பவுலருக்கும் கடினமாக இருக்கும்.
அனேகமாக முந்தைய போட்டியில் அவருக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அவரை ஷார்ட் பிட்ச் பந்துகளை வைத்து பாகிஸ்தான் பவுலர்கள் தாக்கினார்கள். ஒருவேளை அது தான் அவரது விக்கெட்டை எடுக்கும் வழியாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.