வாகனின் சர்ச்சைக்குரிய கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது மைக்கேல் வாகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன், “கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் இவர்தான் உலகின் தலைசிறந்த வீரராக இருப்பார். ஆனால் தற்போது அவர் இல்லாததற்கு காரணம் விராட் கோலியை சமூக வலைதளங்களில் இந்தியர்கள் கொண்டாடுவதால் தான். விராட்டுக்கு சமூக வலைதளங்களில் நிறைய லைக், அதிக ஃபாலோயர்கள் உள்ளதால் அவர் தான் சிறந்தவர் என்பது போல் உள்ளது.
கேன் வில்லியம்சன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலிக்கு சமமானவை தான். அவர் விளையாடும் விதம், அமைதியான குணம் ஆகியவையால் அவர் தான் சிறந்த வீரர் என நினைக்கிறேன். விராட் கோலியை போன்று அவருக்கு 100 மில்லியன் ஃபாலோயர்கள் இல்லை, பல நூறு கோடிகளை சம்பாதிக்க வில்லை என்பதால் அவர் பெரிய அளவில் போற்றப்பட வில்லை என்பது போல” என கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களை வைத்து சிறந்த வீரராக கூறப்படுகிறார் என்ற வாகனின் கருத்து விராட் கோலியின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.