நாங்கள் யாமாற்றினோமா? விதிகளின் படியே விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, Jul 03 2023 12:22 IST
Image Source: Google

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனவுடன் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை துரத்தியபோது பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள், பென் டக்கட் 83 ரன்கள் அடித்து போராடினர். மற்ற வீரர்கள் எவரும் பங்களிப்பை கொடுக்காததால் 327 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த போது பேர்ஸ்டோவ் மற்றும் பென்ஸ் ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் இருந்தனர். 

இவர்களின் பாட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதை உடைத்துவிட்டால் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து விடும் என்று ஆஸ்திரேலியா அணி போராடியது. அப்போது 51ஆவது ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. அதனை பேர்ஸ்டோவ் அடிக்க முயற்சிக்காமல் குனிந்து கொண்டார். இதையடுத்து பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றபோது, அவர் கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை பார்த்த அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். 

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று முறையிட, மூன்றாம் நடுவரின் முடிவுக்கு தீர்ப்பு கொண்டு செல்லப்பட்டது. இதன்பின்னர் மூன்றாம் நடுவர், அவுட் என்று முடிவை அறிவிக்க, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “பேர்ஸ்டோவ் பந்து கடந்தபின், எந்தவிதமான காத்திருப்பும் இல்லாமல் அவர் கிரீசை விட்டு வெளியேறுவதை சில பந்துகளுக்கு முன்பாக அலெக்ஸ் கேரி பார்த்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே அந்த பந்தில் சரியாக ரன் அவுட் செய்தார். என்னை பொறுத்தவரை அது 100 சதவிகிதம் சரியான ஆட்டம்தான். விதிகளும் அப்படிதான் சொல்கின்றன.

இது விதியை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. 4ஆம் நாளில் பிடிக்கப்பட்ட கேட்சை போலவே இதுவும் விதிகளின் படியே உள்ளது. அப்படிதான் நாங்களும் பார்க்கிறோம். பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருக்கும் போது எங்களுக்கு முழுமையான பதற்றத்தை கொடுத்துவிட்டார். பிட்ச்சில் எந்த உதவியுமில்லை. அதனால் எங்களின் திட்டம் ஷார்ட் பால்களை வீசுவதாக மட்டுமே அமைந்தது. 2-0 என்று ஆஷஸ் தொடரில் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை