சாய் சுதர்ஷனுக்கு ஆட்டநாயக விருது என்று நினைத்தேன் - டெவான் கான்வே!
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று அசத்தியது. அந்த அணிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும். இதன் மூலம் அதிக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில் மிக முக்கிய பங்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் கான்வேக்கு உண்டு. இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடிய நியூசிலாந்தின் டெவோன் கான்வே 25 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் பதினாறு ஆட்டங்களில் விளையாடி 140 ஸ்ட்ரைக் ரேட்டில், 52 ரன் ஆவரேஜில், 672 ரன்கள் குவித்து அசத்தினார். தற்பொழுது ஐபிஎல் தொடர் குறித்துபேசிய அவர், “எனக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது குறித்து நிச்சயம் நான் ஆச்சரியப்பட்டேன். சாய் சுதர்ஷன்தான் ஆட்டநாயகன் விருது வெல்வார் என்று நான் நினைத்தேன். அவர் நம்ப முடியாத அளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதே சமயத்தில் ஜடேஜா பேட் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அம்பதி ராயுடுவின் ரன்கள் பெரிதாக இல்லை என்றாலும், அந்த ஆட்டத்தில் மிக முக்கியமான ரன்களாக இருந்தது. இதனால் எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் நாள் முடிவில் ஆட்டநாயகன் விருதை வெல்வது அல்லது தவறவிடுவது குறித்து நான் கவலைப்பட மாட்டேன். குழுவாக இணைந்து கோப்பைகளை வெல்வதுதான் முக்கியம்.
நான் பெற்ற வெற்றிகளில் ஐபிஎல் வெற்றி மிகச்சிறந்தது பெரியது என்று கூறியது சமூக வலைதளத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்பொழுது அதிகாலை 3.30 மணி. நாங்கள் பலவிதமான உணர்ச்சிகளை கடந்து கொண்டிருந்தோம். நான் உணர்ச்சி வசத்தில் என்ன சொல்கிறேன் என்று தெரியாமல் சொல்லி இருக்கலாம். உண்மையாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்று பட்டத்தைக் கைப்பற்றியது சிறப்பம்சம் கொண்டதாக இருந்தது.
ஆனால் நான் பெற்ற வெற்றிகளில் ஐபிஎல் தொடர் வெற்றியே எனக்கு மிகப்பெரியதாக இருக்கிறது. நான் அந்தக் கருத்தை வெளியிட்ட பிறகு சில மணி நேரங்கள் சில நியூசிலாந்து பையன்கள் என்னைச் சமூக வலைதளத்தில் கேலி செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் அது நன்றாகத்தான் இருந்தது. விளையாட்டு வீரர்கள் சில நேரங்களில் இப்படியான நேரத்தில் உணர்ச்சிவசத்தில் சிக்கிப் பின்னர் வருத்தப்படலாம்.
2020ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் விரக்தியில் எனது பேட்டில் எனது கையை குத்தி எனது விரல் உடைந்தது. ஆனால் நான் அப்போது அதை உணரவில்லை. இதனால் என்னால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. எனவே இப்படியான விஷயங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.