எங்களது நடுவரிசை பேட்டிங் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாக இருந்தது - ஷாருக் கான் !
ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில பலம்மிக்க லக்னோ அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கேப்டனாக கேஎல் ராகுல் தலைமை ஏற்று இருக்கும் லக்னோ அணி கடந்த போட்டியில் 200+ இலக்கை அபாரமாக துரத்தி பெங்களூர் அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் வெற்றி பெற்று இருந்தது.
அந்த அணியில் கையில் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் இருக்க, கே எல் ராகுல், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா என சிறப்பான இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சிலும் அபாரமான அணியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்தப் போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் விளையாட முடியாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே பேட்டிங் பெரிய பலவீனமான ஒன்றாக பஞ்சாப் அணிக்கு இருக்கிறது.
இப்படி இந்த போட்டியில் லக்னோ அணி வெல்லவே அதிக வாய்ப்பு இருந்த நிலையில் அவர்களை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேத்யூ ஷார்ட் துவக்கத்திலும், சிக்கந்தர் ராஸா நடுவிலும், இறுதியில் ஷாருக்கானும் சிறப்பாக செயல்பட இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.
இறுதியில் வந்து 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி உடன் 23 ரன்கள் எடுத்த ஷாருக்கான் போட்டிக்கு பின் பேசும் பொழுது, “முதல் பகுதி ஆட்டத்தின் முடிவுக்கு பின்னால் நான் சொன்னது போல, எங்களது நடுவரிசை பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு ஆக வேண்டியது முக்கியமாக இருந்தது. சிக்கந்தர் ராஸா மற்றும் அனைவரும் விளையாடிய விதத்தில், நான் இறுதியில் சென்று ஆட்டத்தை முடிப்பதற்கு வசதியாக இருந்தது.
நான் விளையாட வர தாமதமானது. ஜித்தேஷ் சர்மா ஆட்டம் இழந்த பொழுது டைம் அவுட் வந்தது. நான் எனது மனதை தெளிவாக வைத்திருக்க முயற்சி செய்தேன். என்னுடைய பயிற்சிகள் இப்படி விளையாடுவதற்கு பலனளிக்கிறது. நான் அனைத்து திசைகளிலும் ஷாட்கள் விளையாடுவது சரிவராது. எனவே நான் நேராக அடிக்க முடிவு செய்தேன். அதன்படியே அடிக்கவும் செய்தேன்.
ஹர்பரித் பேட்டிங் செய்யும் பொழுது 19 ஆவது ஓவரின் கடைசியில் பெரிய ஷாட் விளையாட சொன்னேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் ஆட்டம் இழந்து விட்டார். ஆனாலும் நான் ஸ்ட்ரைக்கில் இருக்க முடிந்தது நல்ல விஷயம். அதனால் ஆட்டத்தை முடிப்பது வசதியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் .