மயங்க் யாதவின் பந்துவீச்சு அபரிவிதமானது - ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 54 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், லக்னோ அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் யாதவ் வேகத்தில் அந்த அணி வீரர்கள் தடுமாறினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் ஷிகர் தவான் 70 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதேபோல் அதிரடி வீரர்கள் பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரண் போன்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
மேலும் தனது அறிமுக போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான், இப்போட்டியில் லக்னோ அணி சிறப்பாக விளையாடியது. எங்களின் அணியின் லிவிங்ஸ்டன் காயமடைந்தது பின்னடைவாக மாறியது. ஏனெனில் அவரை நாங்கள் டாப் ஆர்டரில் களமிறக்க திட்டமிட்டோம். நாங்கள் இப்போட்டியில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றோம்.
ஆனால் மயங்க் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசினார். அவரின் வேகம் மற்றும் லைன், லெந்த் ஆகியவை எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதனால் அவரது வேகத்தை அவருக்கு எதிராகவே பயன்படுத்த திட்டமிட்டேன். ஏனெனில் அனுபவ வீரரானெ எனக்கு அந்த வேகத்தை இதற்கு முன் விளையாடிய அனுபவம் உள்ளது. இருப்பினும் அவர் சரியாக எனக்கு எதிராக யார்க்கர் பந்துகளை வீசி டாட் பால் மற்றும் ரன்களை கட்டுப்படுத்தியது ஆச்சரியமளிக்கிறது.
இதனை சிந்தித்து சக பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். மைதானத்தின் அருகில் இருக்கும் பவுண்டரியை பயன்படுத்துமாறு கூறினேன். ஆனால் அவர் பேர்ஸ்டோவ் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங்கின் உடல் பகுதிக்கு பந்துகளை வீசியதுடன் அவர்களது விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதன்பின் ஜித்தேஷ் சர்மா களமிறங்கிய போது, மயங்க் யாதவை அட்டாக் செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவருக்கு பதிலாக மற்ற பவுலர்களை அட்டாக் செய்யலாம் என்றேன்.
ஆனால் அவர் ஏற்படுத்திய பிரஷர் அபரிவிதமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பந்துவீசிய மொஹ்சின் கானும் சரியான லைன் அண்ட் லெந்தில் பந்துவீசி எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார். இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து நிச்சயம் நாங்கள் பகுப்பாய்வு செய்வது அவசியம். அதேபோல் எங்களின் ஃபீல்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் நாங்கள் இப்போட்டிகளை சில கேட்சுகளை தவறவிட்டது எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தது” என தெரிவித்தார்.