ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த சஹா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது.
இந்த ஐபிஎல் சீசனில் அனைவரையும் கவர்ந்த விஷயம், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி தான். இதற்கு முன் கேப்டன்சி அனுபவமே இல்லாத ஹர்திக் பாண்டியா மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்தார்.
களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப் என அனைத்திலும் அசத்தி, ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டு அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றார்.
இந்த சீசனின் பெஸ்ட் லெவனை தேர்வு செய்த அனைத்து முன்னாள் வீரர்களுமே ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்தனர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் விளையாடிய வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே அவரது சிறப்பான கேப்டன்சியை பாராட்டி பேசினர்.
இந்நிலையில், பாண்டியாவின் கேப்டன்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடிய சீனியர் வீரர் ரிதிமான் சஹா, ஐபிஎல்லில் சிறப்பாகபேட்டிங் ஆடிய நிலையில், அதற்கு பாண்டியா தான் காரணம் என கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 15ஆவது சீசனின் ஆரம்பக்கட்டத்தில் மேத்யூ வேட் தான் குஜராத் அணியின் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால், அவர் சரியாக ஆடாததையடுத்து, ஒருசில போட்டிகளுக்கு பின் விருத்திமான் சஹாவை தொடக்க வீரராக இறக்கிவிட்டார் கேப்டன் பாண்டியா.
அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாகபேட்டிங் செய்த சஹா, 11 போட்டிகளில் 317 ரன்கள் அடித்து குஜராத் அணிக்கு நல்ல தொடக்கங்களை அமைத்து கொடுத்து, அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் குறித்தும் தனது சிறப்பான பேட்டிங் குறித்தும் பேசிய விருத்திமான் சஹா, “வெவ்வேறு அணிகளால் ஐபிஎல் ஏலத்திற்கு முன் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மீது ஹர்திக் பாண்டியா நம்பிக்கை வைத்தார். மெகா ஏலத்தின் முதல் நாளில் நான் விலைபோகவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் ஆரம்பத்தில் எனக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. பின்னர், என்னை தொடக்க வீரராக இறக்கிவிட்டார் பாண்டியா.
இது எனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. அதை அமைத்து கொடுத்தது பாண்டியா தான். பாண்டியாவின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று கடினமாக போராடினேன். குஜராத் அணியில் ஒவ்வொரு வீரருமே அவரவர் கடமையை செவ்வனே செய்தனர். இதுதான் சாம்பியன் அணியாக ஆவதற்கு அவசியம்” என்று தெரிவித்தார்.