ஜோஸ் பட்லர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போல இருந்தார் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சந்தீப் சர்மா உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
மேற்கொண்டு ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, நிதீஷ் ரானா போன்ற வீரர்களையும் அணி ஏலத்தில் எடுத்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்துகளும் ஏழுந்துவருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “ஐபிஎல் தொடர் ஒரு அணியை வழிநடத்தவும், உயர்ந்த மட்டத்தில் விளையாடவும் உங்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், அது உங்களுக்கு நெருக்கமான நட்பை உருவாக்கவும் உதவுகிறது. ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் ஒன்றாக விளையாடி, நீண்ட பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தோம், எப்போதும் தொடர்பில் இருந்தோம்.
அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போல இருந்தார். நான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது போது, அவர் என்னுடைய துணை கேப்டனாக இருந்தார், அணியை வழிநடத்துவதில் எனக்கு பெரும் பங்கு வகித்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன் அவரை விடுவிப்பது எனக்கு மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்றாக இருந்தது. இங்கிலாந்து தொடரின் போது கூட, இரவு உணவின் போது நான் இன்னும் அந்த முடிவை எடிக்கவில்லை என்று கூறினேன்.
ஐபிஎல்லில் ஒரு விஷயத்தை என்னால் மாற்ற முடிந்தால், வீரர்களை விடுவிப்பதற்கான விதியை நான் மாற்றுவேன். இது அதன் நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட மட்டத்தில், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட தொடர்புகளையும் உறவுகளையும் நீங்கள் இழக்கிறீர்கள். இது எனக்கும், உரிமையாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என அனைவருக்கும் கடினமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்த ஜோஸ் பட்லர், நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவித்தது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 107 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள், 19 அரைசதங்கள் என 3582 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.