தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
பயோ பபுள் பாதுகாப்பு சூழலுடன் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் அனைவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் இந்திய அணி வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலின் பெற்றோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஒருவேளை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால் தானாகவே தொடரில் இருந்து விலகியிருப்பேன் என யுஸ்வேந்திர சஹால் வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய சாஹல், எனது பெற்றோரின் நிலை அறிந்ததும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடலாம் என்று எண்ணினேன். பெற்றோர்கள் வீட்டில் சிரமத்தில் இருக்கும் போது விளையாட்டில் கவனம் செலுத்துவது மிக கடினம். அவர்களுக்கு மே 3ஆம் தேதி கரோனா உறுதியானது. அதனால் நானே தொடரிலிருந்து வெளியேறலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அடுத்த 2 நாட்களில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது.
என் தந்தைக்கு ஆக்சிஜன் அளவு 85 - 86 என்ற கணக்கிற்கு சென்றுவிட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவரை, நேற்று தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். எனினும் அவருக்கு இன்னும் கரோனா தொற்று உள்ளது. ஆனால் அவரின் ஆக்சிஜன் அளவு தற்போது 95 -96 என்ற கணக்கில் சீராக உள்ளது. எங்களுக்கு தற்போது உள்ள ஒரே ஆறுதல் அது மட்டும் தான். இன்னும் ஒரு சில நாட்களில் தந்தை குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.