பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Thu, May 02 2024 12:22 IST
பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பறினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - ரைலீ ரூஸோவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 46 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஷஷாங்க் சிங் 25 ரன்களையும், சாம் கரண் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், இப்போட்டியில் ரன்களை குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன். இந்த போட்டியில் முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்ச் சாதகமாக இல்லை. போகப்போக ஃபிட்ச் நன்றாக பேட்டிங் செய்ய உதவியது. இந்த போட்டிக்கு முன்னதாக டாஸில் வெல்வதற்காக பயிற்சிகூட எடுத்தேன். ஆனாலும் என்னால் டாஸை வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எனது பேட்டிங்கினைவிட டாஸ் போட செல்லும் போது அழுத்தமாக இருக்கிறது.

கடந்த போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் எப்படி வென்றோம் என எங்களுக்கே அதிசயமாக இருக்கிறது. ஏனெனில் 200க்கும் மேல் அடித்திருக்க வேண்டிய களத்தில் 180 கூட அடிக்க முடியவில்லை. காயம் காரணமாக முக்கிய வீரர்கள் விளையாடாதது, முதல் ஓவருக்குப் பிறகு தீபக் சஹாரின் காயம் என இவைதான் உண்மையான பிரச்னைகளாக இருக்கின்றன. விக்கெட் தேவைப்படும்போது 2  பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக எங்களால் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியவில்லை. இருப்பினும் அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை