டி20 உலகக்கோப்பை: அக்டோபர் 24-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
அதன்படி துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்க அனைத்து நாடுகளிலும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு குழுக்களாக பிரிந்து மொத்தம் 12 அணிகள் விளையாடவுள்ளன.
இதில், குரூப் 1இல் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளும், குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகளும் மோதவுள்ளன.
முதல் அரையிறுதி அபுதாபியில் நவம்பர் 10ஆம் தேதியும், இரண்டாம் அரையிறுதி துபாயில் நவம்பர் 11ஆம் தேதியும், இறுதிப் போட்டி துபாயில் நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
மேலும் சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், அக்.31ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், நவ.3ஆம் தேதி ஆப்கானிஸ்தான் உடனும், நவ.5ஆம் தேதி தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணியுடனும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.