உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $3.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.30.8 கோடி தோராயமாக) வழங்கப்படும் என்றும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு $2.16 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.18.48 கோடி தோராயமாக) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பரிசுத்தொகையவிட வெற்றியாளருக்கு 125 சதவீதமும், தோல்வியடைந்தவருக்கு 162 சதவீதமும் அதிகமாகும்.
முன்னதாக இத்தொடரில் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உலக டெஸ்ட் சாம்பியஷிப் பட்டத்தை வென்ற அணிக்கு பரிசுதொகையாக $1.6 மில்லியனும், தோல்விடைந்த அணிக்கு $80ஆயிரம் டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு $1.44 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.12.32கோடி தோரயமாக) வழங்கப்படவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
WTC 2023-25 ஐசிசி பரிசுத்தொகை விவரம் (டாலர்களில்)
- வெற்றியாளர் -ஆஸ்திரேலியா/தென் ஆப்பிரிக்கா - $3,600,000
- ரன்னர்-அப் - ஆஸ்திரேலியா/தென் ஆப்பிரிக்கா- $2,160,000
- மூன்றாவது இடம் - இந்தியா - $1,440,000
- நான்காவது இடம் - நியூசிலாந்து - $1,200,000
- ஐந்தாவது இடம் - இங்கிலாந்து - $960,000
- ஆறாவது இடம் - இலங்கை - $840,000
- ஏழாவது இடம் - வங்கதேசம் - $720,000
- எட்டாவது இடம் - வெஸ்ட் இண்டீஸ் - $600,000
- ஒன்பதாவது இடம் - பாகிஸ்தான் - $480,000