ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!

Updated: Sat, Oct 28 2023 18:34 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக மொத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் வருத்தப்பட வேண்டி இருந்தது. 

ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியில் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் எல்லாப் பக்கத்திலும் அடித்து நொறுக்கினார்கள். காயத்தில் இருந்து திரும்ப வந்த ஹெட் அப்படி எதையும் காட்டவில்லை. தொடர்ந்து இந்த உலகக் கோப்பையில் விளையாடியவர் போல விளாசி தள்ளினார். 

இன்னொரு முனையில் டேவிட் வார்னர் தன்னுடைய சிறப்பான பேட்டி ஃபார்மை மேலும் தீவிரப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 28 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் அரைசதம் அடித்தார். இதற்கடுத்து டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் தன்னுடைய அரை சதத்தை அடித்தார்.

அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 58 பந்துகளில் தனது 4ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 18, மார்னஸ் லபுஷாக்னே 18, மிட்செல் மார்ஷ் 36 ரன்கள் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல் 41 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 38 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 37 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களுக்கு ஆல அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ், டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணையும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டெவான் கான்வே 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - டெரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் 21 ரன்களிலும் என ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 77 பந்துகளில் தனது 2ஆவது உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஜிம்மி நீஷமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இலக்கை நோக்கி அழைத்துச்சென்றனர். அப்போது நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கு வகையில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 116 ரன்களை குவித்திருந்த ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதைத்தொடர்ந்து வந்த மிட்செல் சாண்ட்னர் மற்றும் மேட் ஹென்றி ஆகியோரும் ஒரு சில பவுண்டரிகளை அடித்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் இறுதிவரை போராடிய ஜிம்மி நீஷம் அரைசதம் கடந்து வெற்றிக்காக போராடிய நிலையில் 57 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டாகினார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை