ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 246 டார்கெட்!

Updated: Tue, Oct 17 2023 19:24 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 246 டார்கெட்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

மழை காரணமாக தமதமான இந்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விக்ரம்ஜித் சிங் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் வந்த நட்சத்திர வீரர்கள் காலின் அக்கர்மேன் 13, பாஸ் டி லீட் 2, ஏங்கல்பெர்ட் 19 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேஜா நிடமனுரு 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் லோகன் வான் பிக்கும் 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் - வென்டர் மெர்வ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த வான்டர் மெர்வ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் எட்டாவது விக்கெட்டிற்கு இந்த இணை 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். ஆனால் அடுத்து களமிறங்கிய ஆர்யன் தத் இரண்டு இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 78 ரன்களையும், ஆர்யன் தத் 3 சிக்சர்கள் உள்பட 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை