ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!

Updated: Wed, Mar 22 2023 11:38 IST
Image Source: Google

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது.

கடந்த காலங்களை போல் அல்லாமல் ஒட்டுமொத்த தொடரும் இந்தியாவிலே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆரம்ப கட்டப் பணிகளில் பிசிசிஐ தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பை தொடங்கும் ஒரு ஆண்டுக்கு முன்பே எந்த மைதானங்களில் போட்டியை நடத்தப் போகிறோம் என்று அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும்.

ஆனால் பிசிசிஐ அப்படி ஒரு கடிதத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வருமா என்ற சிக்கலும், மழைக்காலத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் மைதானங்களை தேர்வு செய்வதில் குழப்பம் போன்ற பல சிக்கல்கள் இருந்தது. இந்த நிலையில் பத்து அணிகள் மோதும் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று உலகக்கோப்பை போட்டிகளை சென்னை, பெங்களூர், டெல்லி ,தர்மசாலா, கவுஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை என 12 மைதானங்களில் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் விளையாடப்படுகின்றன. இந்த 12 மைதானங்களில் எந்த அணி எந்த எந்த மைதானத்தில் போட்டி நடைபெறும் ? இதில் பயிற்சி ஆட்டங்கள் எந்த மைதானத்தில் நடைபெறும் போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அக்டோபர் மாத காலம் தென்னிந்தியாவில் மழை பெய்யும் என்பதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது .

இதன் காரணமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற மைதானங்கள் உலககோப்பை போட்டியை நடத்தாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிசிசிஐ 3 மைதானங்களையும் தேர்வு செய்திருக்கிறது. இதில் சென்னை மைதானத்தில் காலிறுதி போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை