ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நேரந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்கள் எடுத்த நிலையில் குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 ரன்கள் எடுத்திருந்த இப்ராஹிம் ஸத்ரானும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதி 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து ரஹ்மத் ஷாவுடன் இணைந்த அப்துல்லா ஒமர்ஸாய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் ரஹ்மத் ஷா 26 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய இக்ரம் அலிகில் 12, முகமது நபி 2, ரஷித் கான் 14, நூர் அஹ்மத் 26, முஜீப் உர் ரஹ்மான் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை களத்தில் இருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 97 ரன்களை மட்டுமே எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். பின் பவுமா 23 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டுசென் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 25 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 10 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்த ஆண்டிலே பெலுக்வாயோ தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 76 ரன்களையும், ஆண்டிலே பெலுக்வாயோ ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.