ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாஹிதி, ஒமர்சாய் அரைசதம்; இந்தியாவிற்கு 273 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது விவாதமானது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 22 ரன்களை எடுத்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களுக்கும், மற்றொரு நட்சத்திர வீரரான ரஹ்மத் ஷா 16 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - அஸ்மதுல்லா ஒமார்சாய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒமர்சாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் மறுப்பக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்மதுல்லா ஒமார்சாய் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 80 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடி வீரர்களான நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களுக்கும், முகமது நபி 19 ரன்களுக்கும் என ஜஸ்ப்ரித் பும்ராவிடம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அதிரடி காட்டிய ரஷித் கானும் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.