ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!

Updated: Wed, Nov 08 2023 17:54 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் வந்த ஜோ ரூட் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு தொடக்க வீரரான டேவிட் மாலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 28 ரன்கள் எடுத்திருந்த  ஜோ ரூட் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 11, ஜோஸ் பட்லர் 5 , மொயீன் அலி 4 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - கிறிஸ் வோக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 78 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் அரைசதம் கடந்த கையோடு கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை சதமடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 108 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களைச் சேர்த்துள்ளது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை