நடுவர்களின் புள்ளிவிவரத்தையும் திரையிட வேண்டும் - டேவிட் வார்னர் காட்டம்!

Updated: Wed, Oct 18 2023 19:38 IST
Image Source: Google

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டியில் இலங்கையை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

முன்னதாக லக்னோ நகரில் நடைபெற்ற அப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 210 ரன்கள இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 11 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து லெக் ஸ்டம்ப்பில் படவில்லை என்பதை உணர்ந்த வார்னர் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து பெரிய திரையில் சோதிக்கப்பட்ட போது பந்து லேசாக மட்டுமே லெக் ஸ்டம்ப்பில் உரசியது. இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் அதே தீர்ப்பு மீண்டும் வழங்கப்பட்டதால் கோபமடைந்த வார்னர் நடுவரை திட்டிக்கொண்டே சென்றது சர்ச்சையை உண்டாக்கியது. சொல்லப்போனால் வார்னர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இப்போதும் அது அவுட்டில்லை என்பதை உறுதியாக சொல்லும் டேவிட் வார்னர், வீரர்களைப் போல நடுவர்கள் எந்தளவுக்கு சரியான தீர்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய வார்னர், “பொதுவாக பந்து லெக் ஸ்டம்ப்பை அடிப்பது போல் தெரிந்தால் அது இன்னும் அதிகமாக வெளியே விலகி செல்லும் என்பதை நான் அறிவேன். அது பற்றி நான் ஜோயல் வில்சனிடம் கேட்ட போது பந்து ஸ்விங்காகி உள்ளே வந்திருக்கும் என்பதால் அவுட் கொடுத்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் ரிப்ளையில் பார்த்ததில் எனக்கு அப்படி தெரியவில்லை.

மேலும் வீரர்கள் களமிறங்கும் போது பெரிய திரையில் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதே போல போட்டிக்கான நடுவர்களை அறிவிக்கும் போது அவர்களுடைய புள்ளிவிவரங்களையும் நான் பார்க்க விரும்புகிறேன். இந்த நடைமுறை என்எஃப்எல் விளையாட்டில் இருக்கிறது. எனவே நீங்கள் தவறான முடிவை கொடுக்கும் போது அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேளுங்கள். 

அதற்காக யாரும் உங்களுடைய தலையை கடிக்கப் போவதில்லை. அதே போல வீரர்கள் கேள்வி கேட்டால் அவர்களுடைய தலைகளை நடுவர்கள் கடித்து விட மாட்டார்கள். அதை செய்தால் இந்த விளையாட்டில் சில நடுவர்கள் இருக்கவே மாட்டார்கள்” என்று கட்டமாக கூறியுள்ளார். வார்னரின் இந்த கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை