ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடி வீரர் லிட்டன் தாஸ் முதல் பந்திலெயே அடிக்க முயல, மேட் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசனும் 16 ரன்களுக்கும், நஹ்முல் ஹொசைன் சாண்டொ 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஹதி ஹசன் மிராஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹிம் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிக்கூர் ரஹிம் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மூத்த வீரர் மஹ்முதுல்லா ஒருபக்கம் நிதானம் கட்டம், மறுமுனையில் களமிறங்கிய தாஹித் ஹிரிடோய் 13 ரன்களுக்கும், தஸ்கின் அஹ்மத் 2 சிக்சர்களை விளாசி 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்திலிருந்த மஹ்முதுல்லா 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் லோக்கி ஃபர்குசன் 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 45 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் முதல் பந்திலேயே சிக்சரை பறக்கவிட்டு தனது ஆட்டத்தை தொடங்கினார். இதில் கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செலும் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்கள் எடுத்த நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.