ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. தொடக்க நாளான இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விலையாட, மறுபக்கம் டேவிட் மாலன் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பேர்ஸ்டோவுடன் இணைந்த ஜோ ரூட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

Advertisement

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக தொடங்கிய ஹாரி ப்ரூக் 25 ரன்களுக்கும், மொயீன் அலி 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார்.

அவருடன் இணைந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 20 ரன்களிலும், அரைசதம் கடந்து 77 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட்டும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அவர்களைத் தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களிலும், சாம் கரண் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதியில் ஆதில் ரஷித் 15 ரன்களையும், மார்க் வுட் 13 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலீப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கான்வேவுடன் ரச்சின் ரவீந்திரா இணைந்தார். இருவரும் தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 83 பந்துகளில் தனது 5ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் ரச்சின் ரவீந்திரா 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் எனும் சாதனையை படைத்துள்ளனர். 

அத்துடன் நிறுத்தாத டெவான் கான்வே 119 பந்துகளில் 150 ரன்களையும் கடந்து அசத்தினார்.  இதன்மூலம் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 19 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 152 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 123 ரன்களையும் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News