ஐசிசி உலகக்கோப்பை 2023: மகாராஜ், ஜான்சென் அபாரம்; நியூசியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Wed, Nov 01 2023 21:13 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: மகாராஜ், ஜான்சென் அபாரம்; நியூசியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டிக் காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடியா கேப்டன் டெம்பா பவுமா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டி காக் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 21ஆவது சதத்தைப் பதிவுசெய்தது அசத்தினார். மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டி காக் அடிக்கும் 4ஆவது சதமாகவும் இது அமைந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த டி காக் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 114  ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இது அவருடைய இரண்டாவது சதமாக அமைந்தது. அவருடன் இணைந்த டேவிட் மில்லரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். 

மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 133 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அடுத்து பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம், டிரண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 9 ரன்களில் மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் யங்கும் 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து அணியைக் சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட டெரில் மிட்செல் 24 ரன்களுக்கும், டாம் லேதம் 4 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர், டிம் சௌதீ, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கும் என கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை போராடிய கிளென் பிலீப்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 60 ரன்கள் எடுத்திருந்த கிளென் பிலீப்ஸும் விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நிசியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை