ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 8 ரன்களை எடுத்திருந்த கேப்டன் டெம்பா பவுமா விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார். இதையடுத்து டி காக்குடன் இணைந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 83 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என் தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இது அவருடைய முதல் உலகக்கோப்பை சதமாகவும் அமைந்தது. ஆனால் அடுத்த பந்தையும் டி காக் அடிக்க முயற்சிக்க அது நேராக டி சில்வா கையில் தஞ்சமடைந்தது.
இருப்பினும் மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வெண்டர் டுசென் தனது 5ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்த கையோடு, 13 பவுண்டரி 2 சிக்சர்கள் என 108 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை இலங்கை அணியின் பந்துவீச்சை பந்தாடினர்.
இருவரும் இணைந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 300 ரன்களைக் கடந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் எதுபற்றியும் கவலைப்படாமல் அதிரடியில் மிரட்டிய ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஐடன் மார்க்ரம் தன்வசப்படுத்தினார். முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டி அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னும் அதிரடியாக விளையாட முயற்சித்த ஐடன் மார்க்ரம் 54 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 106 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் தனது அதிரடியைக் காட்டத்தொடங்கிய டேவிட் மில்லாரும் பவுண்டரிகளைப் பறக்கவிட, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சட இலக்கை நிர்ணயித்த அணி எனும் வரலாற்று சாதனையையும் தென் ஆப்பிரிக்க அணி தன்வசப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 428 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.