அன்று பிராத்வெய்ட், இன்று ரிங்கு சிங் - கொண்டாடும் ரசிகர்கள்!

Updated: Mon, Apr 10 2023 11:16 IST
Image Source: Google

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியை பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போனது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசி அதிர்ச்சியை கொடுத்தார் பிராத்வெய்ட்.

பிராத்வெய்ட் செய்த சாகசத்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மிரண்டே போனார்கள். இனி கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு ஃபினிஷிங்கை யாராலும் கொடுக்க முடியாது என்று பெருமை கொண்டார்கள். ஆனால் அதனை விட சிறந்த ஃபினிஷிங்கை கொடுத்து சென்றுள்ளார் கேகேஆர் அணியின் இளம் வீரர் ரிங்கு சிங். கடைசி இரு ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு, 43 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் ஹாட்ரிக்கால், ஆட்டம் முடிந்தது என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் 19ஆவது ஓவரில் ரிங்கு சிங் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய போது கூட, வர்ணனையில் இருந்த இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், முடிந்த போன கல்யாணத்திற்கு மேளம் அடிப்பதாக ரிங்கு சிங்கை கிண்டல் செய்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 29 ரன்கள் தேவையென்பதால், வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் பலரும் சத்தியம் செய்து அடுத்தப் போட்டிக்காக காத்திருந்தார்கள். ஆனால் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரிங்கு சிங்கிடம் கொடுத்தார் உமேஷ் யாதவ்.

கடைசி 5 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரிக்கு வாய்ப்பு இல்லை என்று பார்க்கப்பட்டது. ஒரே ஒரு நல்ல பந்து வீசினாலும் குஜராத் அணியின் வெற்றி உறுதி என்ற நிலை. ஆனால் ரிங்கு சிங் யாரும் எதிர்பார்த்திராத, இன்னும் சொல்லப் போனால் கனவில் கூட நினைத்திராத சாதனையை படைத்தார். பல அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த குஜராத் அணிக்கே, அதிர்ச்சியை இறக்கினார். பிராத்வெய்ட் அடித்த 4 சிக்சர்களுக்கு சமமான சாதனையான 5 சிக்சர்களை விளாசினார் ரிங்கு சிங். 

 

இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. ஐசிசியின் இந்த ட்விட்டர் பதிவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை