டாஸ் ஜெயிச்சா மேட்ச் ஜெயிச்சுடலாமா?  ஐசிசி-க்கு கவாஸ்கர் ஆலோசனை

Updated: Mon, Nov 15 2021 18:54 IST
ICC Should Ensure a Level-playing Field, Says Sunil Gavaskar (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

இந்த டி20 உலக கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளில் ஒன்று கூட இறுதிப்போட்டிக்கு வரவில்லை. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. 

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரிதாக யாருமே எதிர்பார்த்திராத ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றது. இந்தியாவின் தோல்விக்கும், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கும் முக்கியமான காரணம் டாஸ் தான்.

இந்த தொடர் முழுவதுமாகவே வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக டாஸ் இருந்திருக்கிறது. இந்த தொடரில் விளையாடிய 45 போட்டிகளில், 29 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணிகள் தான் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனாலேயே டாஸ் ஜெயிக்கும் அணி கண்ணை மூடிக்கொண்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

குறிப்பாக துபாயில் நடந்த போட்டிகள் அனைத்திலுமே இலக்கை விரட்டிய அணிகள் தான் வெற்றி பெற்றன. துபாயில் டாஸ் வென்ற அனைத்து அணிகளுமே ஃபீல்டிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளன.  துபாயில் இந்தியாவிற்கு எதிராக இலக்கை விரட்டி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வெற்றி பெற முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் டாஸ் வென்றதுதான் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. டாஸ் இந்த தொடர் முழுவதுமாகவே போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திகழ்ந்தது.

இந்த உலக கோப்பை தொடரின் ஆரம்பத்திலாவது, பனிப்பொழிவு இருந்தது. அதனால் 2ஆவது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதால், டாஸ் வென்று அணிகள் ஃபீல்டிங் தேர்வு செய்தன. ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் பனிப்பொழிவும் கிடையாது. ஆனாலும் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி இலக்கை விரட்டிய அணிகள் தான் வெற்றி  பெற்றன.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “இறுதிப்போட்டியின்போது பனிப்பொழிவு இல்லை என்று வர்ணனையாளர்கள் கூறினார்கள். எனவே பனிப்பொழிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஆடிய போட்டிகளின்போது பனிப்பொழிவு இருந்தது. 

Also Read: T20 World Cup 2021

பனி இல்லையென்றாலும், வேறு ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. அது என்னவென்று கண்டறிய வேண்டும். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதுதொடர்பாக ஆராய்ந்து, ஒரு போட்டியில் ஆடும் இரு அணிகளுக்கும் ஒரே லெவல் ஃபீல்ட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை