டி20 உலகக்கோப்பை: வரலாற்றில் இடம்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.
நாளைய தினம் கீலாங் மைதானத்தில் நடக்கும் முதல் சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து - ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது குறித்து ஐசிசி. உலக கோப்பை போட்டிக்கான தலைமை நிர்வாகி மிட்செல் என்ரைட் நேற்று கூறுகையில் , 'உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் ஒன்று. இந்த போட்டிக்காக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன’ என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ளது. இப்போட்டிகான டிக்கெட்டுகள் முழுமையாக (90 ஆயிரத்திற்கும் மேல் இருக்கை வசதி கொண்ட மைதானம்) விற்று தீர்ந்து விட்டது. பின்னர் கூடுதலாக இணைக்கப்பட்ட சொகுசு டிக்கெட்டுகளும் 10 நிமிடத்திற்குள் காலியானது. இதே போல் சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் சூப்பர் 12 சுற்று போட்டிகளில் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன.