யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!

Updated: Tue, Jan 30 2024 20:23 IST
யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி! (Image Source: Google)

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெறற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஷிங் குல்கர்னி 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதார்ஷ் சிங்குடன் இணைந்த நட்சத்திர வீரர் முஷீர் கான் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் இருந்த அதார்ஷ் சிங் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இப்போட்டியில் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆதார்ஷ் சிங் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த முஷீர் கானும் தனது அரைசதத்தைக் கடந்தார். அதன்பின் அவருக்கு துணையாக விளையாடி வந்த கேப்டன் உதய் சஹாரன் 34 ரன்களையு, ஆரவெல்லி அவனிஷ் 17 ரன்களிலும், பிரியான்ஷு மொலியா 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷீர் கான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். நடப்பு யு19 உலகக்கோப்பை தொடரில் முஷீர் கான் விளாசும் இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகா அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து அசத்திய முஷீர் கான், அமெரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தை 70 ரன்களுக்கு மேல் சேர்த்தது நினைவில் கூறத்தக்கது. 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டாம் ஜோன்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சினேஹித் ரெட்டி ரன்கள் ஏதுமின்றியும், ஸ்டாக்போல் 5 ரன்களிலும் , ஜேம்ஸ் நெல்சன் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஆஸ்கான் ஜேக்ஸன் 19, ஆலிவர் திவேத்தியா 7, ஸாக் கம்மிங் 16, அலெக்ஸ் தாம்சன் 12, எவால்ட் ஷ்ரூடர் 7, ரியான் ரன்கள் எதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளையும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அண்டர் 19 அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அண்டர் 19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங்கி சதமடித்தும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முஷீர் கான் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை