ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இரண்டாம் இடத்தில் நீடிக்கும் ஆஸி.!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021இல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில் 4ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 86.66 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நீடிக்கிறது.
மேலும் பாகிஸ்தான் அணி 75 சதவிகிதத்துடன் 3ஆம் இடத்தில் உள்ளது. 4ஆம் இடத்தில் இருந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 49.07 சதவிகிதத்துடன் 5ஆம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட்டில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஆஷஸ் தொடரில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.