மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் குறித்து மௌனம் கலைத்த சஹா!

Updated: Tue, Feb 22 2022 10:41 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட்டில் மூத்த வீரர் விருதிமான் சாஹா போட்ட ட்வீட்களும், குற்றச்சாட்டுகளும் தான் தற்போது பெரிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்தார். அதில், "இனி நீ விக்கெட் கீப்பர் கிடையாது; எனது அழைப்பை ஏற்கவில்லை என்றால் இனி உன்னை எப்போதுமே நேர்க்காணல் செய்ய மாட்டேன்; இந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்; பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு மற்றொரு புறம் டிராவிட், கங்குலி, சேத்தன் சர்மா ஆகியோர் குறித்தும் சாஹா குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட பிசிசிஐ, விருதிமான் சாஹாவிடம் அந்த நபரின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தப்படும். அதில் உண்மை வெளிவரும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அது குறித்து சாஹா பேசியுள்ளார். அதில், “பிசிசிஐயில் இருந்து இதுவரை யாரும் என்னை தொடர்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர்கள் கேட்டாலும், நான் அந்த பத்திரிகையாளரின் பெயரை கூறப்போவதில்லை. ஏனென்றால் ஒருவரின் தொழிலை கெடுப்பது எனது நோக்கம் அல்ல. அதனை தெரிவிப்பதாக இருந்திருந்தால், அந்த ட்வீட்டிலேயே வெளிப்படுத்தியிருப்பேனே.

ஊடக துறையில் இருக்கும் சில இதுபோன்று இதுபோன்று அநியாயங்களை செய்கின்றனர். வீரர்களை மரியாதை இன்றி நடத்துகின்றனர் என்பதை உலகிற்கு காட்டவே இப்படி செய்தேன். இதுதான் எனக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுத்த பாடம். ஆனால் அந்த பத்திரிகையாளர் மிகவும் பிரபலமானவர். இனி இதுபோன்று எந்தவொரு வீரருக்கும் நடக்காது என்ற நம்பிக்கை எனக்குள் வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட சாஹாவே பெயரைக் கூற மாட்டேன் எனத்தெரிவித்திருப்பதால் பிரச்சினை இத்துடன் முடியுமா? அல்லது தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை