புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால்.., தோல்வி குறித்து நஜ்முல் ஹொசைன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் ஜக்கர் அலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 228 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தாவ்ஹித் ஹிரிடோய் 100 ரன்களையும், ஜக்கர் அலி 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி 22, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்ஸர் படேல் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, “நாங்கள் பேட்டிங் செய்தபோது பவர்பிளேயில் அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்ததே இப்போட்டியின் தோல்விக்கு காரணம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஹிரிடோயும் ஜேக்கரும் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் இருவரும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து அதையே செய்வார்கள் என்று நம்புகிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் நாங்கள் மைதானத்தில் சில தவறுகளைச் செய்தோம். கேட்சுகளை தவறவிட்டோம், சில ரன் அவுட்களை தவறவிட்டோம். ஒருவேளை அதனை நாங்கள் சரியாக செய்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் அது ஆட்டத்தின் முடிவை மாற்றி இருக்கும். அதனால் அடுத்த போட்டியில் வீரர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.